Senior Congress leader E.V.K.S. Ilangovan passes away: Cremation to be held this evening | காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம்: இன்று மாலை உடல் தகனம்
by தினத்தந்திசென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 2 முறை தலைவராகவும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து செயற்கை சுவாசக்கருவி மற்றும் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று டாக்டர்களிடம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்தார்.
இந்தநிலையில் சிகிச்சை பலன் இன்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. இந்த தகவலை மியாட் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் பிற்பகல் 1 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டது.
மணப்பாக்கம் இல்லத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தொண்டர்கலின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படுகிறது.
இதனிடையே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் டெல்லியில் இருந்து இன்று சென்னை வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Tamilnadu Congress EVKS Elangovan passes away சென்னை காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன்